Sunday, June 10, 2012

சுஜாதா

மனித உயிர் என்பது ஓர் வற்றாத அதிசயம். அதன் ரகசியத்தை அறிந்து கொண்டால் ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும். உயிரின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகளும் வேதாந்திகளும் செய்யும் முயற்சிகளைத் தொகுத்துத் தந்து அவைகளிலிருந்து கிடைக்கும் முடிவுகளை படிப்பவருக்கே விட்டுவிடும் நோக்கத்தில் எழுதப்பட்டது இந்த நூல்.

இறப்பு என்பது முற்றுப்புள்ளியா? – சுஜாதா

செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை ,என் புத்தகங்கள் ,என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும் .செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.

நான் நானாகவே தொடர வேண்டும் . அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும் . கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும் . அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன , முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்.

அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது "அது ஒரு முற்றுப் பள்ளி.வி ஸீஸ் டு எக்ஸிஸ்ட்.எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி"
"Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes. we do not exist".

ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்," Nobody dies; they live in memories and in the genes of their children".    How True ?

"மனைவி, மக்கள், பழைய பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்துபோய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்துவிடுவோமாம். உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்" — 13 வருடங்களுக்கு முன்பு  (18-1-1998) சுஜாதா எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதி.

'எழுத்தும் வாழ்க்கையும்' – சுஜாதா கட்டுரையில் இருந்து…  (11-05-2003)

'யாருமே சாவதில்லை'.  இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது.  'அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ?  அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது.  அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது.  குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள்.  அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது'  என்று சொல்வார்.

சிதம்பரத்தில் காலமாகி விட்ட தன் அண்ணன் டாக்டர் கிருஷ்ணமாச்சாரியின்  உடலை எரிக்கும்போது…. (நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள் புத்தகத்திலிருந்து)

"இவன் பிறப்பதுமில்லை.  எக்காலத்திலும் இறப்பதுமில்லை.  இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை.  இவன் பிறப்பற்றான்.  அனவரதன்.  பழையோன்,  உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்" என்று பாரதி மொழி பெயர்த்த கீதை வாக்கியம் தான் எனக்கு ஆறுதல்.

மரணம் தொடர்பாக சுஜாதா ஆயத்தமாகவே இருந்தார் எனச்சொல்ல வேண்டும்। "இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்க்கிறேன்। இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுகொள்கிறேன்। என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது" – இதை அவரின் 'கற்றதும் பெற்றதும்' என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார்

அவர் ஒரு விஞ்ஞான எழுத்தாளரென்பதால் அவரிடம் திரும்ப திரும்ப மரணத்தை வெல்வது பற்றி பல்வேறு கேள்வி பதில்களில் பல்வேறு விதங்களில்  கேட்கப்பட்டதுண்டு.    அதற்கு அவரின் பதில்

"மரணிக்காமல் வாழ்ந்துகொண்டே இருந்தால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய்விடும்"
சுவாரஸ்யம் போய்விட்டதா சுஜாதா??
 

நிறமற்ற வானவில் – சுஜாதா நாவலில் இருந்து சில பகுதிகள்…..

மிக நெருக்கமானவர்கள் மரணத்தில் தான், நமக்கு உண்மையான தரிசனம் கிடைக்கிறது.  தினம் தினம் பல பேர் இறக்கிறார்கள்.  அந்தச் சாவெல்லாம் நம்மைப் பாதிப்பதில்லை.

'மரணம் – கடவுளுக்கு வாசல்' என்று ரஜனீஷ் சொல்லியிருக்கிறார்.  மனிதனால் இதுவரை களங்கப்படாத ஒரே ஒரு சங்கதி மரணம்.  அதை அவன் இன்னமும் கொச்சைப்படுத்தவில்லை.  கொச்சைப்படுத்தவும் முடியாது.  அது துல்லியமானது.  அதை அவனால் அறியவே முடியாது.  அதை அவனால் ஒரு விஞ்ஞானமாகவோ, வேதாந்தமாகவோ மாற்றமுடியாது.  அது அவன் கைப்பிடியிலிருந்து எப்போதும் வழுக்கிச் செல்கிறது.  உங்கள் வாழ்வில் எதிர்பாராமல் மரணம் குறுக்கிடும்போது உங்கள் வாழ்வு அர்த்தமற்றதாகிறது.  ஆம், வாழ்வு அர்த்தமற்றதுதான்.  ஒவ்வொருவரும் கொஞ்சம் இறக்கிறோம்."

சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை.  ஒரு தொடர்ச்சிதானாம். நம்ம உடம்பில் அறுநூறு கோடி செல் உயிரணுக்கள் இருக்கு.  ஒவ்வொரு இருபத்துநாலு மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு.  முப்பது வயசுக்கப்புறம் நம்முடைய மூளை வருஷத்துக்கு ஒரு பர்சென்ட் செத்துக்கிட்டு இருக்காம்.  கொஞ்சம் கொஞ்சமா, செதில் செதிலா அழிஞ்சுண்டு வர்றோம்.  அதனால நாம எப்போ சாகறோம்.  எப்போ உயிரோட இருக்கோம்கிறதே சரியா சொல்ல முடியாது.  பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கோம்…"

"அதனால…?"

"இறந்து போயிட்டாங்கன்னு சொல்றதில அர்த்தமேயில்லை.."

"எப்படி ?"

"நம்ம மனசிலே அவங்களைப் பத்திய நினைப்புகள் இருக்கிற வரைக்கும் தே டோன்ட் டை !"

மஹாபலி – சுஜாதா சிறுகதையில்  இருந்து…..

'How did you die?'

'Death comes with a crawl,
or comes with a pounce
And whether he is slow or spry
It is not the fact that
you are dead that counts
But only, how did you die?'

அவரது எழுத்துக்கு என்றும் மரணமில்லை.


மறுபிறவி பற்றி சுஜாதா (கற்றதும் பெற்றதும்)

உடி ஆலன் "எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை.  ஆனால், எதற்கும் ஒரு செட் பனியன், அண்டர்வேர் எடுத்துச் செல்லப்போகிறேன்" என்றார்.

என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது — உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டா ?  இதன் கிளையாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா ?அது உடலில் எங்கு இருக்கிறது ?  சாவை வெல்ல முடியுமா ?  நாம் சாசுவதமாக வாழ முடியுமா என்பவை அந்தக் கேள்வியின் பல வடிவங்கள்.  நாற்பது வயசுக்குப்புறம் பலர் மனத்தை இது குடைகிறது.  இதற்கெல்லாம் பதில் தரும் விதத்தில்,Immortality பற்றி ஒரு விஸ்தாரமான கட்டுரை சமயம் கிடைக்குபோது நிச்சயம் எழுதுகிறேன்.  அதைப்பற்றி எனக்கு தெளிவான கருத்துக்கள் உள்ளன.  இப்போதைக்கு Edward Young என்பவரின் 'Night  Thoughts on Life , Death and Immortality ' என்னும் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள் கொடுக்கிறேன் –

"நீங்கள் சாசுவதமாக வாழ முடியும் என்பதை ஏன் சந்தேகிக்கிறீர்கள்?  நீங்கள் உயிர் வாழ்வதே ஒரு அதிசயம் அல்லவா, வியப்பல்லவா ?  உயிரெனும் அற்புதத்தைக் கொடுத்தவனால் அதன் முடிவை ரத்து செய்ய முடியாதா ?  இதில் என்ன அதிசயம் !"

யோசித்து வையுங்கள் விவாதிப்போம்.


சுஜாதா பதில்கள் – பாகம் 2  (உயிர்மை பதிப்பகம்)

ஸ்ரீப்ரியா

'நாமும் ஒரு நாள் இறந்துவிடுவோம்' என்கிற எண்ணம் உங்களிடம் எந்த மனநிலையை உருவாக்குகிறது ?

பயத்தையும், அவசரத்தையும்.

ராமசுப்ரமணியன்.

மரணமுற்ற பிறகு வேறு எந்த வடிவிலாவது மனிதன் வாழ வாய்ப்பிருக்கிறதா ?

வாய்ப்பிருந்தாலும் ஞாபகம் இருக்காது.

சி. எஸ். பாஸ்கர்.

எனக்கு கொஞ்ச நாளாக மரண பயம் இருக்கிறது.  இதைப் பற்றி சொல்லவும் ?

முதலில் உங்களுக்கு எதனை வயது, சொல்லுங்கள்.  எஞ்சிய வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டிய தீர்மானம் இருந்தால் மரண பயம் இருக்காது.

பிரேம்.

எளிமையாய் தற்கொலை செய்து கொள்வது எப்படி ?

ஏ. கே. ராமானுஜனின் கவிதை ஒன்றைப் படியுங்கள். தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நண்பனுக்கு (விருப்பத்தைக் கைவிடு)  நீ ஏற்கனவே இறந்து போயிருக்கலாம் என்கிறார்.

கீதையில் எனக்குப் பிடித்த இரண்டு மேற்கோள்கள்…

'பிறந்தவர் இறப்பது நிச்சயம். இறந்தவர் பிறப்பது நிச்சயம். எனவே, தவிர்க்க இயலாததை எண்ணித் தவிக்காதே!' – இரண்டாம் அத்தியாயம்.
 
கீதையில் சிறந்த அத்தியாயம், பகவான் தன்னைப் பற்றி விவரிக்கும் 10-ம்அத்தியாயம். அதில் சிறந்த ஸ்லோகம் 34. 'நானே அனைத்தையும் விழுங்கும் மரணம். நானே எதிர்காலத்தின் ஆரம்பம்!' இந்த வரியை விஞ்ஞானி ஒபென்ஹைமர், 1945-ல் முதல் அணுகுண்டைப் பரிசோதித்த இடத்தில் மேற்கோள் காட்டினார்.

No comments:

Post a Comment